Friday, August 7, 2020

பகவான் ஶ்ரீ ராமர் ஒப்பற்ற தலைவர்- ஶ்ரீ ராமரிடமிருந்து கார்ப்பரேட் உலகம் கற்க வேண்டிய பாடங்கள்!

 ஜெய் ஶ்ரீ ராம்!! 

இந்தியா எங்கும் அதிர்ந்து ஒலித்த கோஷம் இது. இன்றைய தலைமுறையினர் "அயோத்தி" இராமர் மண் என்பதை இதிகாசத்தில் மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். ஆனால் இன்று, அயோத்தியில் - இராமர் கோவில் கொள்வதை நேரில் காணும் ஆசிர்வாதத்தை பெற்றிருக்கிறார்கள். வாட்சப், டிவிட்டர் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் நேற்று திகட்ட திகட்ட ஒலித்து கொண்டிருந்தது ஜெய் ஶ்ரீ ராம். கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயமும் நேற்று ஒரே ஸ்ருதியில், ஒரே இலயத்தில், ஜெய் ஶ்ரீ ராம் என்ற ராம நாமம் சொல்லியே துடித்தது. இந்தியர்களின், இந்துக்களின் அறம் பல காலங்களுக்கு பின் நேற்று முன் தினம் அயோத்தியில் ஸ்தாபிக்கப்பட்டது.

அந்த பரிபுரண நன்நாளினை நினைவுக்கூறும் வகையிலும், இராமாயணம் என்பது பழமையை பறைசாற்றும் நூல் அல்ல அது எந்த காலத்திற்கும் ஏற்புடையது என்பதை உணர்த்தும் வகையில், ஶ்ரீ ராமரிடமிருந்து, ராமாயணத்திலிருந்தும் இன்றைய கார்ப்பரேட் உலகம் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். 

நம்பிக்கையூட்டுங்கள்( Motivating)

இன்றைய சூழலில் மிக அவசியமானது, முதன்மையானது நம்பிக்கையூட்டுவது. பணியாளர்களின் திறனை அதிகரிக்க இதை விட வலிய ஆயுதம் இல்லை. யாரிடம்ம் என்ன திறமை இருக்கிறது? அதை எப்படி பயன்படுத்தி கொள்வது ? ஒருவரிடம் இருக்கும் திறனை எவ்வாறு உற்சாகமூட்டி வெளிக்கொணர்வது என்கிற வித்தையை இன்றைய கார்ப்பரேட் உலகம் ஶ்ரீ ராமரிடம் கற்க வேண்டும். ராமாயணத்தில் சீதை இலங்கையில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் கடலைத் தாண்டி யார் செல்வது என்ற விவாதம் ஏற்படுகிறது. அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக்கொண்டிருந்தனர் யாரும் கடலைத் தாண்டிச்சென்று, பின் திரும்பி வரும் அளவிற்கு வலிமை உள்ளவர்களாக இல்லை. அப்போது ஜாம்பவான் அவர்கள் தனிமையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரிடம் சென்று ஆஞ்சநேயரிடம் புதைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில், அவரை பற்றிய உண்மையை மற்றும் உயர்வான எண்ணங்களை அவரிடத்திலேயே உயர்வாக சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார். அதன் பின், அனுமன் மிக நீண்ட கடலைத் தாண்டிச்சென்றதும் அதன் பின் அவர் செய்த சாகசங்களின் பெருமையும் அவரை உற்சாகப்படுத்திய ஜாம்பாவனையே சாரும். 

கள ஆய்வு (Field Work) 

இன்றைய சவால்ல் நிறைந்த உலகில் வெல்ல வேண்டுமெனில், திறன் அறிதல் என்பது மிக முக்கியமானது அனுமன் இலங்கையில் வந்து இறங்கிய உடன் முதலில் சிறு வடிவம் எடுத்து இலங்கையை வலம் வந்து கண்காணித்தார். மக்கள் வசிப்பிடங்கள், அவர்களின் பலம், பலவீனம் வெற்றிக்கான வாய்ப்புகள், ஆபத்துகள் போன்றவற்றை தெளிவாக ஆராய்ந்து பகுப்பாய்வை தெளிவாக செய்ததாலேயே அவரால் அவருடைய பணியை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. 

திறனறிதல்/உறவுகளை மேம்படுத்தல் (Human Resource)

 துணை சேர்த்தல் என்பது நிர்வாகத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது ஒரு மிகச் சிறந்த யுத்தியாக நிர்வாக நகர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமாயணத்தில், இந்த யுத்தியை பயன்படுத்தி, சுக்ரீவன் தன்னை விட வலிமையான வாலியை வீழ்த்தினான். அது மட்டுமல்ல தன் அண்ணன் மகனான அங்கதனின் திறன் அறிந்து அவனையே தனக்காக போரிடவும் செய்தான். இந்தத் தந்திரம் சுக்ரீவனிடம் இல்லாது போயிருந்தால் அவனுக்கு எதிராக திரும்பி இருக்கும். எனவே திறனறிவதிலும், உறவுகளை மேம்படுத்துவதிலும் மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 

பின்னூட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல் (Accepting Feedbacks)

 அறிவுரைகளை/பின்னூட்டங்களை பரிசீலித்தல் என்பது எந்த நிர்வாகத்திற்கு அவசியமானது. தனக்கு கீழ் இருப்பவர்கள் ஆனாலும் அறிவுரைகளை பரிசீலிப்பது என்பது மிக முக்கியமானது. ராவணன் தன் தம்பிகள் அறிவுரையை முற்றிலுமாக புறக்கணித்ததன் விளைவாக தனக்கான வீழ்ச்சியை தேடிக்கொண்டான். ஆனால் ராமனோ விபீஷணனை ஆதரித்து தன்னோடு சேர்த்துக் கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டார். தலைமைப்பண்பு (Leadership) ஒரு நல்ல தலைவன் தனக்கு கீழே நிறைய தலைவர்களை உருவாக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். ஶ்ரீ ராமர் தன்னிகரற்ற தலைவன் என்றாலும் சுக்ரீவன், லட்சுமணன், அனுமன் ஏன் விபிஷணனுக்கு கூட தனக்குள் இருக்கிற தலைமைப்பண்பை கடத்தி அவர்களையும் தனிப்பட்ட வகையில் தலைவராக உருவாக்கி தான் ஒதுங்கி நின்று அவர்களை தலைவராக .செயல்பட வைத்தார். தனித்துவம் (Being Unique/Branding) நம்மை தனித்த புகழுடன் அடையாளப்படுத்த வேண்டுமெனில், தனித்தன்மையுடன் இருப்பது அவசியம். பிராண்டிங்க் என சொல்வது இதை தான். ஒரு நிறுவனத்தின் பெயர் என்பது, பெரும் நன்மதிப்பை பெற்று தரத்தால் உயர்ந்து நிற்க வேண்டும். ஒரு புது சிந்தனை அல்லது உத்தி வெற்றியடைவதற்கு இந்த தனித்துவம் முக்கியம். அதை உருவாக்கியவரையும் தாண்டி அந்த தனித்துவம் தரத்தால் தனித்தும் உயர்ந்தும் நிற்க வேண்டும். ராமர் வானரப் படைகளுடன் இணைந்து பாலம் கட்டும்போது கற்கள்மிதக்க வேண்டும் என்பதற்காக கற்களின் மேல் ராமர் பெயர் எழுதப்பட்டது. ராமர் ஒரு கல்லை தயாரித்து தன் பெயரை எழுதாமல் கடலில் போட்ட போது அது மிதக்காமல் மூழ்கியது. அது ராமரே ஆக இருந்தாலும் ராமனின் பெயர் என்ற தனித்துவத்திற்கு ராமனே கட்டுப்பட வேண்டியதாயிற்று. 

துல்லியமான கருத்து பரிமாற்றம் (Communication) 

கருத்து பரிமாற்றம் என்பது நிர்வாகத்தில் மட்டுமல்ல தனிநபர்கள் இருவருக்குமிடையில் கூட மிக மிக முக்கியமானது. இதில் ஏதாவது குறைகள் ஏற்பட்டால் தீர்க்க முடியாத பிரச்சினை வழிவகுத்துவிடும் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் இடையில் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இது ஒருவரின் மரணத்தில் வந்துதான் முடிந்தது. வாலி மாயாவியுடன் சண்டையிட குகைக்குள் நுழைந்தான். நீண்ட நேரம் காவலுக்கு இருந்தான் சுக்ரீவன். மிக நீண்ட நாட்கள் ஆனதால் வாலி இறந்துவிட்டார் என்று நினைத்து கல்லை வைத்து மூடிவிட்டு ராஜ்ஜியத்தை கைப்பற்றினான். வாலி குகைக்குள் சென்று அரக்கனை கொன்று திரும்பி வரும்போது சுக்ரீவன் ஆட்சி செய்வதை பார்த்து தன்னை ஏமாற்றிவிட்டான் என்று நினைத்து அவனை அடித்து துரத்துகிறான். வாலி சுக்ரீவன் இடையே வந்த கருத்து பரிமாற்ற பிரச்சனை மரணத்தில் வந்து முடிந்தது. 

குழுவின் நம்பிக்கை (Trust on Team) 

எல்லா தகுதிகளும் இருந்தும், நம்பிக்கை மட்டும் இல்லையென்றால் தோல்வி என்பது மிக நிச்சயமானதாகவே இருக்கும். இதற்கு ராமனின் ராணுவமும், ராவணனின் ராணுவமும் சிறந்த உதாரணம். ராவணனின் ராணுவம் முன்னொரு காலத்தில் தேவ, அசுரர்களை வென்று மூவுலகும் நடுங்கும் வலிமையை பெற்றிருந்தது. ஆனாலும் கூட படையில் இருந்த கும்பகர்ணன் போன்ற தளபதிகள் ராவணன் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். விபீஷணன் அண்ணனை விட்டு விலகியே விட்டான். ஆனால் போரில் அனுபவமே இல்லாத இதுபோன்ற வலிமையான ராணுவத்தை இதுவரை எதிர்கொண்டிராத வானரப் படை வீரர்கள் தங்கள் தலைமை மீதும் அந்த தலைமை கொண்டிருந்த நோக்கத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். கடைசி வானர வீரர் கூட யாரென்றே தெரியாத ராமனுக்காக பல மைல் தூரம் பயணித்து கடலை தாண்டி தன் உயிரை இழக்கவும் தயாராக இருந்தார் என்றால் அது ராமன் என்ற ஒப்பற்ற தலைமை பண்பினாலேயே ஏற்பட்டது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.